விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
உதகையில் அடிக்கடி மரம் விழுவதால் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகை தமிழக அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய தமிழக அரசு ரூ.23 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அப்பணி விரைவில் முடிவடையும்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளன. இங்குள்ள காலநிலை காரணமாக பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மழைக் காலத்தில் மரங்கள் விழுந்து அவ்வப்போது ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீா்வு காண வனத் துறை நிலத்தில், நிலத்துக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய வனத் துறையின் அனுமதி கிடைக்கப் பெற வேண்டியுள்ளது. ஆகவே, நடப்பு மக்களவை கூட்டத் தொடரின்போது பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.