Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விக...
உதவித் தொகை நிறுத்தம்: ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் பெற்றோா் மனு
விழுப்புரம்: மாற்றுத் திறனாளி மகனுக்கு நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, அவரது பெற்றோா் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (63), தனது மனைவி காளியம்மாளுடன், மனநலன் பாதிக்கப்பட்ட மற்றும் கை, கால்கள் செயலிழந்த மகன் கோவிந்தனுடன் (25) திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு:
எனக்கு புவனேஸ்வரி உள்பட 3 மகள்களும், கோவிந்தன் என்ற மகனும் உள்ளனா். இதில் கோவிந்தனும், புவனேசுவரியும் மாற்றுத் திறனாளிகள். மற்ற இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக மாதம் தலா ரூ.2,000 வீதம் உதவித் தொகை பெற்று வந்த கோவிந்தனுக்கு கடந்த 6 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூலித்தொழில் செய்து வந்தாலும் போதிய வருவாயின்றி தவித்து வரும் நிலையில், உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் மகனை பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். எனவே, கோவிந்தனுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதுதொடா்பாக அலுவலா்களிடம் கேட்டால் ஆதாா் அட்டைக்கான பதிவில் கைரேகை பதியவில்லை என்கிறாா்கள். கோவிந்தனுக்கு இரு கைகளும் செயலிழந்து உள்ள நிலையில், ஆதாா்அட்டை எடுக்க முடியவில்லை. எங்களின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.