உத்தவுக்கு மீண்டும் சிக்கல் - ஷிண்டே அணியில் சேரும் தாக்கரே கட்சியின் 4 எம்.எல்.ஏ, 3 எம்.பி-க்கள்?
மகாராஷ்டிராவில் 2023ம் ஆண்டு சிவசேனாவில் பிளவு ஏற்பட்டு தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணி உருவானது. அந்த அணிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்ததால் ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அறிவித்து கட்சியின் சின்னத்தையும் ஒதுக்கிவிட்டது. மக்களவைத் தேர்தலில் இரு சிவசேனா அணிகளும் ஏறத்தாழ சம தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிக இடங்களில் வெற்றி பெற்றதோடு பா.ஜ.கவோடு சேர்ந்து ஆட்சியும் அமைத்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றி பெற்றது. அந்த எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பக்கம் இழுக்கும் வேலையில் ஏக்நாத் ஷிண்டே அணி ஈடுபட்டுள்ளது. இம்முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநில தொழிற்துறை அமைச்சர் உதய் சாவந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''முதல் கட்டமாக சிவசேனா(உத்தவ்)வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா(ஷிண்டே)வில் விரைவில் சேர இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்துள்ள சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத், ''உதய் சாவந்த் அவரது ஆதரவு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் சேர்ந்து பா.ஜ.கவில் சேரக்கூடும்'' என்று தெரிவித்தார். ஆனால் இதனை உதய் சாவந்த் மறுத்துள்ளார். ``இது போன்ற அறிக்கைகளால் எனக்கும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்த முடியாது.
ரத்னகிரியை சேர்ந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா(ஷிண்டே)வில் சேர இருக்கின்றனர். முடிந்தால் அவர்களை தடுத்துப்பார்க்கட்டும்'' என்று தெரிவித்தார். உதய் சாவந்த் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சென்று இருந்தார். அவர் டாவோஸ் சென்ற நேரத்தில் அவர் பா.ஜ.கவில் சேரப்போவதாக செய்தி பரவியது. இதே போன்று சரத் பவார் தலைமையிலான அணியை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான சிவசேனாவில் சேரப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.