Periyar: "சீமான் வியாபார நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறார்..." - டிடிவி தினகரன் சொல்வதென்ன?
விருதுநகர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஆளும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சியாக நடைபெறுகிறது. இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணமே மக்கள் மனதில் உள்ளது.
பழனிசாமி ஆட்சி மீது இருந்த கோபத்தினால், மக்கள் தி.மு.க.விடம் ஆட்சியைக் கொடுத்தனர். ஆனால் இவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல. விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வியாபார மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்புக்கும் இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எல்லா இடங்களிலும் எல்லாத்துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளைக் கூட போராட்டம் நடத்தவிடாமல் கைதுசெய்யும் நிலையால் அனைவருக்கும் இந்த ஆட்சியின்மீது வெறுப்பும் வந்துவிட்டது. கூட்டணிக் கட்சியினர் கூட இந்த ஆட்சிக்கு ஏதாவது அழுத்தம் கொடுத்துப் பார்ப்போம் எனச் சில முயற்சிகளை எடுக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், காவல் துறையை ஏவல் துறையாகச் செயல்படுத்தி வருகிறார். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மக்கள் பணி செய்வது கேள்விக்குறியாக உள்ளது.
வேங்கை வயல் விவகாரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சியினரே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கேட்கும் அளவுக்கு இவர்களின் லட்சணம் உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டுத் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இனியாவது இந்த ஆட்சியாளர்கள் சரியாகச் செயல்பட வேண்டும். உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்ணியத்துக்காக, சமுக நீதிக்காக, சமத்துவத்துக்காகப் போராடிய தலைவர்களைச் சீமான் என்ன காரணத்திற்காக இப்படிப் பேசுகிறார் எனப் புரியவில்லை. கடந்த ஆண்டுகளில் தந்தை பெரியாரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார் என்பதை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்க்க முடியும். தந்தை பெரியாரைப் பற்றி சீமான் பேசியது சக அரசியல் தலைவராக எனக்கு வருத்தம் தருகிறது. சீமான் என்ன பேசுகிறார் என்பதைத் தெரிந்து பேச வேண்டும். அவர் சுய விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் இவ்வாறு பேசி வருகிறார். இதுபோன்ற பேச்சுக்களைச் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
துரோகத்திற்குப் பெயர் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்திற்கு ஒரு அடையாளம் உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி பொருத்தமாக இருப்பார். தனது சுயநலத்திற்காக ஒரு கட்சியையே கேடயமாகப் பயன்படுத்தக் கூடியவர்.
தி.மு.க. எப்போதுமே இரட்டை வேடம் போடுபவர்கள். காவேரி பிரச்னை, பெரியாறு அணை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் முதல் இன்று வரை தி.மு.க.வின் நிலைப்பாடு இரட்டை வேடம்தான். ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். தற்போதுகூட தமிழ்நாட்டில் வெவ்வேறு மதத்தினர் இடையே பிரச்னை வரும்வகையில் மதப் பிரச்னைகளைத் தூண்டும் பல விஷயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் இந்த அரசு தடுக்கவில்லை. தென் தமிழகத்தில் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய இரு சமூக மக்களிடையே பிரச்னைகள் நடப்பதை இந்த ஆட்சி தடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில் போதை கலாசாரத்தால் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்குக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகியவை அதிகரித்து வருகின்றன. மதச் சண்டைகளும், சாதியச் சண்டைகளும் உருவாக்குவதற்கு இந்த ஆட்சியில் சதி திட்டம் தீட்டப்படுகிறதோ என்ற அச்சம் உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை, முழுக்க முழுக்க மக்களின் உணர்வினைப் புரிந்துகொண்டு மத்திய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதற்கு முழு முயற்சி எடுத்தது தமிழக பா.ஜ.கதான். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய அழுத்தத்தால்தான் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தி.மு.க சொல்வது தவறானது. அப்படியெனில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார்கள். இதுவரை தி.மு.கவினரால் நீட் தேர்வை ரத்து செய்ய முடிந்ததா?.
தேர்தலுக்கு முன்பு, சரியான திட்டமிடலுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தி.மு.க. என்ற தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்றும் மாற்றுச் சக்தியாக இருக்கும். 2026க்கு பிறகு அ.தி.மு.க.விற்கு மூடு விழா நடத்தும் நிலைமை வந்துவிடும். எடப்பாடி பழனிசாமி உழைத்து இந்த இடத்திற்கு வரவில்லை. லாட்டரி சீட்டு அடிப்பதுபோல குருட்டு அதிஷ்டத்தில் பொதுச்செயலாளராக வந்திருக்கிறார். இவர் தி.மு.க.வுடன் ரகசியக் கூட்டணி வைத்திருக்கிறார். அ.தி.மு.க மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைத் தாங்கி இருக்கக்கூடிய அனைவருமே ஒரு அணியில் திரள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு அ.ம.மு.க ஆதரவு அளிக்கிறது. ஈரோடு கிழக்கு தேர்தலில் தி.மு.க.காரர்களுக்குத் தக்கப் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். திருப்பரங்குன்றத்தில் நடக்கும் பிரச்னைகளைத் தமிழக அரசு கூர்ந்து கவனித்துத் தீர்வுக்கான வேண்டும். இந்துக்களும், இஸ்லாமியர்களும் எப்போதும் போல ஒற்றுமையாய் இருக்கவும், தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs