ஒரே நாடு ஒரே நேரம்: வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துகேட்பு
ECR கலைஞர் பன்னாட்டு அரங்கம்: "அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து அமைக்கக்கூடாது..." - சீமான் எதிர்ப்பு
``5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 525 கோடி செலவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில் சீமான், ``பெருமழைக் காலங்களில் சென்னையின் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் வகையிலேயே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. சென்னையில், பக்கிங்காம் கால்வாய் ஒரு முக்கியமான வெள்ளநீர் வடிகால் அமைப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாகத் தென்சென்னையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக் காரணமாகக் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை குடியேற்றமும், கட்டுமானங்களும் அதிகரித்துள்ளது.
மழைக்காலங்களில், வேளச்சேரியிலிருந்து சிறுசேரிக்குச் செல்லும் மழைநீர் பல்வேறு நீர்த்தேக்கங்கள் வழியாக இறுதியில் பள்ளிக்கரணைச் சதுப்பு நிலத்தில் நுழைகிறது. அங்கிருந்து ஒக்கியம் மடுவு வழியாக வடிந்து, துரைப்பாக்கம் அருகே பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. வெள்ள நீர் கால்வாய்கள், கோவளம் கடற்கரையின் உப்பங்கழிக்கு அருகில் உள்ள முட்டுக்காடு வழியாக வங்காள விரிகுடாவிற்குள் செல்கின்றன. தென்சென்னையை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கவும், முறையான நீர் வடிகால் வசதியை உறுதி செய்யவும், ஒக்கியம் மடுவு முதல் முட்டுக்காடு வரையிலான கால்வாயைக் கண்காணித்துப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை மாநகரம் சந்தித்த பெருவெள்ளம் ஏற்பட முதன்மைக் காரணம் தென்சென்னை பகுதியிலான வடிகால் அமைப்புகளைத் தமிழ்நாடு அரசு பராமரிக்கத் தவறியதே ஆகும். நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ள காரணத்தினால், மழை நின்ற சில நாட்களுக்குப் பிறகும்கூட வெள்ளம் சூழ்ந்த நிலையில் தென்சென்னை பாதிக்கப்பட்டிருந்தது. இதே பகுதியில், குறிப்பாக முகத்துவாரத்தை ஒட்டியுள்ளப் பகுதியில் இந்தப் பன்னாட்டு அரங்கம் அமைவது தேவையற்றதாகும்.
ஈரநிலங்களில் வானூர்தி நிலையம் அமைப்பது, முகத்துவாரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைப்பது எனச் சூழலியல் முதன்மைத்துவம் பொருந்திய பகுதிகளாகத் தேர்ந்தெடுத்து தேவையற்றத் திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து மேடைகளில் முதல்வர் பேசுவதாலும், முதல்வர் அவ்வாறு பேசிவிட்டார் என்பது மட்டுமே போதும் என்பது போல அதனைப் பாராட்டி வாழ்த்துப் பாடல்களை எழுதுவதாலும் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பேசுவதற்கு மாறாகத் தன்னுடைய திட்டங்களை வெள்ள அபாயத்தை அதிகரிக்கும்வண்ணம் முன்னெடுப்பது இருக்கின்ற நிலையை மேலும் சீரழிக்கவே செய்யும்.
ஒன்றிய அரசின் மாநில அளவிலான சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் இத்திட்டத்திற்குச் சூழலியல் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் வளங்களை அழிக்கும் திட்டங்களை ஒன்றிய அரசு முன்னெடுத்தால் தமிழ்நாடு அரசு அதற்குத் துணை புரிவதும், தமிழ்நாடு அரசு முன்னெடுத்தால் ஒன்றிய அரசு அதற்கு அனுமதி வழங்குவதும் எனத் திமுக - பாஜக கூட்டணியால் பாதிக்கப்படுவது நிலமும் வளமுமே. பன்னாட்டு அரங்கங்கள் நம்முடைய வாழ்க்கை முறை முன்னேற்றத்தின் அங்கமாக இருக்க வேண்டியதுதான், ஆனால் அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து அவை அமைக்கப்படக்கூடாது.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பெயரில் கடலில் பேனா வைக்கவும், கடற்கரையை ஒட்டி அரங்கம் அமைக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கும் முனைப்பானது தமிழ்நாட்டின் வளத்தின் மீதும், தமிழ் மக்களின் நலனிலும் இருக்க வேண்டும் என்றும், இதனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தினைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs