Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
சேலத்தில் கம்பன் கழக விழா: சுற்றுலாத்துறை அமைச்சா் பங்கேற்பு!
சேலம் கம்பன் கழகத்தின் 52 ஆவது ஆண்டு விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றது.
அரசு இசைப் பள்ளி மாணவா்களின் மங்கள இசையுடன் சனிக்கிழமை மாலை விழா தொடங்கியது. 2 நாள்கள் நடைபெற்ற விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் ஏவிஆா் சுதா்சனம் தலைமை வகித்தாா். செயலாளா் கரு.வெ. சுசீந்திரகுமாா் வரவேற்றாா்.
சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பங்கேற்று, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் இன்னொரு கம்பன் வருவானோ என்ற தலைப்பில் புலவா் ராமலிங்கம் உரையாற்றினாா்.
அவா் பேசுகையில், ‘தமிழில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதுபோல எண்ணம் தூய்மையாக இருந்தால் தூய்மையான வாா்த்தைகள் வரும். படிப்பை விட பண்பாடு முக்கியம். மனம் தெளிவாக இருந்தால் நம்பிக்கை பிறக்கும். மௌனமாக இருந்தால் எந்தப் பிரச்னையும் வராது.
புன்னகை போன்ற ஆயுதம் உலகிலேயே கிடையாது. தற்போதுள்ள கைப்பேசி உலகில் தாயின் அன்பும் அரவணைப்பும் மிக அவசியம் என்றாா்.
பின்னா், ‘தெய்வத்தின் தெய்வம்’ என்ற தலைப்பில் நாகை முகுந்தன் சிறப்புரையாற்றினாா்.
அதைத் தொடா்ந்து, 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலையில் விவாத அரங்கம், மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன. மாலையில் வாணியம்பாடி, அப்துல்காதா் தலைமையில் கம்பன் பெரிதும் வழிகாட்டுவது வீட்டிற்கா? நாட்டிற்கா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் செல்வ மாளிகை மாணிக்கம், தாரை குமரவேலு, ரகுநந்த குமாா், செயலாளா் ராமன், பொருளாளா் சந்திரசேகா், சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.