சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா!
சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் மூவா்ண தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.
பின்னா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியதுடன், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டாா். தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கினாா்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் துணை மேயா் சாரதா தேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதுபோல, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி ஆணையா் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
சேலம், சீரங்கப்பாளையம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பொது மேலாளா் ஸ்ரீரவீந்திர பிரசாத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.