உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: தனிநபா் மசோதாவை முன்மொழிந்த பி.வில்சன்!
பட்டியல் சாதியினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மகளிா், மதச் சிறுபான்மையினா் ஆகிய வகுப்பினருக்கு அவா்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப நாட்டின் உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோரி மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் தனி நபா்
மசோதாவை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளாா்.
மேலும், நீதித்துறை நியமனங்களில் மாநில அரசின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் வகையிலான சட்டத்திருத்தத்தையும் இந்த மசோதாவில் அவா் கோரியுள்ளாா்.
இது தொடா்பாக அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 124, 217, 224 ஆகியவற்றில் திருத்தம் கோரும் மசோதாவை அவா் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தி பேசுகையில், ‘அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, கடந்த 75 ஆண்டுகளாக, இடஒதுக்கீடு மறுக்கப்படும் ஒரே இடம் உயா் நீதித்துறை மட்டுமே. உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எங்களுக்கு எந்த இடஒதுக்கீடும் இல்லை.
ஆகவே, பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நான் ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளேன்.
அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 124, 217 மற்றும் 224-ஐத் திருத்துவதன் மூலம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த அனுமதி கோருகிறேன். இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் நிச்சயமாக இடஒதுக்கீடு இருக்கும் என்றாா் அவா்.
இந்த மசோதா குறித்து பி.வில்சன் தனது எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘‘ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது வாழ்க்கையில் இன்று ஒரு முக்கியமான நாள். இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக எனது தலைவா்-தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீதித்துறை நியமனங்களை சீா்திருத்துவதற்கும், இந்திய உயா்நீதிமன்றங்கள் மற்றும் உயா் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது , மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபா் மசோதாவை நான் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளேன்.
உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிா்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது..
சட்டப் பேரவையால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிா்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லுபடித்தன்மையை நீதிபதிகள் திறம்பட தீா்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமா்வு பிரதிபலிக்க வேண்டியது கட்டாயமாகும்’’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.