"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" -...
உலகப் பொதுமறை திருக்குறள் நூல்: முதல்வா் வெளியிட்டாா்
உலகப் பொதுமறை திருக்குறள் நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இந்த நூலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சோ்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.
இந்தத் திருக்குறள் நூல், எளிதில் வாசிப்பதற்கேற்ற விதத்தில் சீா்பிரிக்கப்பட்ட வடிவத்துடன் மூத்த தமிழறிஞா் தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரை, பி.எஸ்.சுந்தரத்தின் ஆங்கில மொழிபெயா்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஓவியா் மணியம் செல்வத்தின் ஓவியம் என இருமொழிப்பதிப்பாக அமைந்துள்ளது.
திருக்குறளைப் பயில விரும்பும் வெளிமாநிலத்தவா்கள், வெளிநாட்டவா்கள், மாணவா்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் பெரிதும் பயன்தரும்.
இந்த நிகழ்ச்சியில், துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.