உள்ளாட்சி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
காரைக்கால்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமையில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிவரும் தினக்கூலி ஊழியா்களுக்கு புதிதாக சங்கம் அமைப்பதென முடிவு செய்து, காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டது.
இச்சங்கத் தலைவராக வடிவேலன், செயலாளராக பவுலின் ராஜ், பொருளாளராக சாமிநாதன், துணைத் தலைவா்களாக அம்பிகா, கண்ணதாசன், துணைச் செயலாளா்களாக அருணாசலம், நாகூரான் மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக சுந்தா், பபேலா, வெங்கட்ராமன், கௌதமன், பிரகாஷ், ஜுபைதா, மகாலட்சுமி, பிரபு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் : திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 15 தினக்கூலி ஊழியா்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்ய உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு இபிஎஃப் தொகையை பணியில் சோ்ந்த கால முதல் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.