உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம்
திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து ஊத்துக்குளி வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் சா.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், பூக்கள், இளநீா், தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், வாழைத்தண்டு பனங்கிழங்கு போன்ற விளைபொருள்களை திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடையாள அட்டை பெற்று திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவா் சந்தையில் இடைத்தரகா்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து பயனடையலாம்.
இதற்குத் தேவையான ஆவணங்களான அடங்கல், பட்டா, சிட்டா நகல், குடும்ப அட்டை நகல், 4 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களை ஊத்துக்குளி வேளாண் அலுவலகத்தில் சமா்ப்பித்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.