ஊடகவியலாளர் மீது தாக்குதல்; மூத்த தெலுங்கு நடிகருக்கு தொடரும் சிக்கல் - கொலை வழக்கு பதிந்த போலீஸ்!
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு. இவருக்கும், இவரின் மகன் மனோஜ் மஞ்சு - மருமகள் மோனிகாவுக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக பிரச்னை நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் மஞ்சு மோகன், தன் மகன் மீது கவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான தகவல்களை சேகரிக்க, ஊடகவியலாளர்கள் சிலர், ஹைதராபாத் புறநகரில் உள்ள ஜல்பல்லியில் நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு ஊடகவியலாளர்களிடம் அநாகரிக முறையில் நடந்துகொண்ட நடிகர் மஞ்சு மோகன், மைக்கைப் பிடிங்கி ஊடகவியலாளர்களரின் முகத்தில் வீசியிருக்கிறார்.
இதில் பலத்த காயமடைந்த ஊடகவியலாளர் ரஞ்சித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கைப் பதிவு செய்த காவல்துறை, ஊடகவியலாளர் ரஞ்சித் குமாரிடம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், ஊடகவியலாளர் ரஞ்சித் குமாருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், பி.என்.எஸ் பிரிவு 118 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தாமாக முன்வந்து காயம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) படி FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.