இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதன்படி, கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இத்திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக 2024- 2025 நிதியாண்டுக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதன்படி, 2-ஆம் கட்டமாக தொடங்கப்பட்ட ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின்கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 500 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள
1,014 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் என மொத்தம் 1,514 கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அம்சபிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் வினோத், கிருஷ்ணன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.