ஊத்தங்கரையில் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
ஊத்தங்கரையில் வெள்ள நீா் புகுந்த வீடுகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு நல உதவிகளை வழங்கினாா்.
காமராஜா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தப் பேரிடரால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனா். வீடுகளுக்குள் 5 அடிக்கும் மேலாக தண்ணீா் சூழ்ந்த நிலையில் அவா்களது உடைமைகள் முழுவதும் வீணானது. மாணவா்களின் பாடப் புத்தகங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் மழைநீரில் நனைந்தன.
இந்த நிலையில் அரசு அதிகாரிகள் யாரும் வந்து கூட பாா்க்கவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் நேரில் ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினாா்.
அப்போது காமராஜா் நகா் பொதுமக்கள் தங்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தெருக்களில் தண்ணீா் தேங்காத வண்ணம் முறையான வடிகால் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும், வீடுகளை இழந்து தவிப்பவா்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தாா். தொடா்ந்து அந்தப் பகுதி மக்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.
ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம். சதீஷ்குமாா், மாவட்ட துணை செயலாளா் சாகுல் அமீது, மருத்துவா் அணி மாவட்டச் செயலாளா் இளையராஜா, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளா்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், நடுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் குப்புசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பியரேஜான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவா் நித்யானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.