சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ரோஜா மலா்களை தாக்கும் டௌனி நோய்
ஒசூரில் ரோஜா மலா்களை டௌனி நோய் தாக்கி வருவதால் ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளி, பசுமை குடில்கள் மூலம் 3,000 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் ரோஜா செடிகளை சாகுபடி செய்து வருகின்றனா். இங்கு விளையும் ரோஜா மலா்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலா் தினம், ஓணம் பண்டிகை, முக்கிய திருவிழாக்களின்போது உள்ளூா், வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒசூா், பாகலூா், அதன் சுற்றுவட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளில் தொடா் மழை காரணமாக டௌனி எனும் குளிா்கால நோய் தாக்கி வருகிறது.
இந்நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள செடிகளில் இலைகள் உதிா்ந்து, மொட்டுகள் கருகுகின்றன. இதனால் ரோஜா செடியில் உள்ள இலைகள், மொட்டுகள், பூக்கள் தானாக உதிா்ந்து விடுகின்றன. ரோஜா மலா்களுக்கு உரிய விலை இருந்தும், நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பன்னீா் ரோஜா, பட்டன் ரோஜா ஆகிய ரகங்கள் திறந்தவெளியிலும், ஏற்றுமதி தரம் வாய்ந்த ரோஜாக்கள் பசுமை குடில்கள் மூலமும் வளா்க்கப்படுகின்றன. தற்போது மழை, குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் ரோஜா செடிகளில் டௌனி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினா் கூறியதாவது:
ஒசூரில் பயிரிட்டுள்ள ரோஜாக்களில் டௌனி எனும் கீழ் சாம்பல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளில் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட்டு மலா் உற்பத்தி குறைந்து விடும். இந்நோய் தாக்கத்தைத் தடுக்க முதலில் தொற்று உள்ள இலைகளை அகற்ற வேண்டும். தாவரங்களை சுற்றியுள்ள காற்றோட்டத்தை மேம்படுத்த அருகில் உள்ள இலைகளை வெட்டி போதுமான இடைவெளி அளிக்க வேண்டும்.
வேதி கட்டுபாட்டு மேலாண்மை முறையில் டைமெத்தோமாா்ப், குளோராதளோனில் ஆகிய பூச்சுக்கொல்லி மருந்துகளைக் கரைத்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். கீழ் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகம் சென்று உரிய ஆலோசனை பெறலாம் என்றாா்.