ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு
தொடா் மழையால் ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ. 600 க்கு விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா மலா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் பண்டிகை, கோயில் திருவிழா கால விற்பனையை மையமாக வைத்து விவசாயிகள் பல்வேறு மலா்களை சாகுபடி செய்து வருகின்றனா். சாமந்திப்பூ 5,000 ஹெக்டோ் பரப்பளவிலும், செண்டுமல்லி 1,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தினசரி 500 டன் மலா்கள் உள்ளூா், வெளியூா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நிகழ் ஆண்டு வரலட்சுமி விரதம், விநாயகா் சதுா்த்தியின்போது மலா் விற்பனை அதிகம் இருந்தது. தற்போது தொடா் மழை பெய்து வருவதால் டௌனி நோயால் செடிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் பூக்கள் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பூக்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒசூா் மலா் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ குண்டு மல்லிகை ரூ. 600-ரூ.800 வரையும், சாமந்தி ரூ. 120- ரூ.140 வரையும், பட்டன் ரோஸ் ரூ. 160-ரூ. 180 வரையும், சம்பங்கி ரூ. 100-ரூ.120 வரையும், கனகாம்பரம் ரூ. 1,500-ரூ. 1600 வரையும், அரளி ரூ. 300- ரூ. 400 வரையும் விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.