Soori: ''தாய்மாமன் சீர் சுமந்த சூரி; நெகிழ்ந்த டான்ஸரின் குடும்பம்" - பஞ்சமி ஃபே...
ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதன்படி, சி.புதுப்பேட்டை, தில்லைவிடங்கன், சி.முட்லுா், நக்கரவந்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கூறியதாவது:
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞா் கனவு இல்லம் திட்டதில் 2024 - 25ஆம் ஆண்டுக்கு 189 வீடுகளும், 2025-26ஆம் ஆண்டுக்கு 256 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்வது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்து சி.புதுப்பேட்டை, தில்லைவிடங்கன், சி.முட்லுா் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 வீடுகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 22 வீடுகளும், பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் 5 வீடுகளும் என 52 வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இந்த ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட மாதா கோவில் தெரு, கொடிமரத் தெரு பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாணை வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
ஆய்வின்போது, சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.