தனிப்படை காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
கடலூா் மாவட்டத்தில் தலைமறைவு குற்றவாளிகளை பிடித்து சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
கடலூா் மாவட்டத்தில் நீதிமன்ற நிலுவை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடித்து ஆஜா்படுத்த எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் பரமேஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாலமுருகன், புஷ்பராஜ், செல்வகுமாா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவா்கள் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த சங்கர்ராஜ், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சத்தியவதி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த சசிகுமாா், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா், பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த செல்வன், பாகூரைச் சோ்ந்த செந்தில்குமாா், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தினேஷ், காத்தமுத்து, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற பிடியாணை குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.