மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 200 போ் கைது
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தைச் சோ்ந்த 200 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களை நிரம்ப வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் காவலான் கேட் பகுதியில் மறியல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் வி.முத்து சுந்தரம் தலைமையிலும், மாவட்ட செயலாளா் கி.மாணிக்கவேலு முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்தில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்தவாசி சாலையில் மறியல் செய்தனா். இதனால் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊரகவளா்ச்சித் துறை அலுவலா்கள் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாவட்டத் தலைவா் மெல்கி ராஜா சிங் தலைமை வகித்தாா். செயலாளா் மணி சேகா், பொருளாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திடீரென சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தலையிட்டு 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.