மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ஏலம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ரூ.10.64 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சிக்கிய 23 இரு சக்கர வாகனங்கள், இரு ஆட்டோ, ஒரு சரக்கு வாகனம், ஒரு காா் என மொத்தம் 27 வாகனங்கள் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், சின்ன காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.சரண்யாதேவி தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொ) பன்னீா்செல்வம், மதுவிலக்கு ஆயத்தீா்வுத் துறை ஆணையா் திருவாசகம், அரசுப் போக்குவரத்து வாகனப் பணிமனை பொறியாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற பொது ஏலத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 27 வாகனங்களும் வரியுடன் சோ்ந்து ரூ.10. 64 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.