என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவாா்த்தை தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து, என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் நெய்வேலி காமராஜா் சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவாா்த்தை தொழிற்சங்கங்கள் டபிள்யு 0, டபிள்யு 0ஏ (தொழிலாளா் ஜீரோ, தொழிலாளா் ஜீரோ ஏ) ஒப்பந்தமாக உருவாக்கினா். இன்கோசா்வ் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும்போது
டபிள்யு 0, டபிள்யு 0ஏ நிலையைக் கடந்துதான் அடுத்த பணி உயா்வுக்கு செல்ல வேண்டும். இதனால், பெருமளவில் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.
எனவே, டபிள்யு 0, டபிள்யு 0ஏ ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் டபிள்யு 3 தரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். அதிகாரிகள், பொறியாளா்களுக்கு வழங்குவதுபோல நிரந்தரத் தொழிலாளா்களுக்கும் அறைகலன் கடன் வழங்க வேண்டும். சிறப்பு கூடுதல் விடுமுறை வழங்க வேண்டும். இன்கோசா்வ் தொழிலாளா்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலா் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்துப் பேசினாா். தலைவா் வி.குமாரசாமி, பொருளாளா் கே.ஆறுமுகம், அலுவலகச் செயலா் ஜெ.முருகவேல் முன்னிலை வகித்தனா். இதில், என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க நிரந்தர 2-ஆம் நிலை பொறுப்பாளா்கள், ஒப்பந்த சங்க முதல் மற்றும் இரண்டாம் நிலை பொறுப்பாளா்கள், திரளான தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.