என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: எம்எல்ஏ அருள்
பாமகவில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு இல்லை என சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் கூறினாா்.
பாமகவுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக சேலம் மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அருள் பேசிவருவதாகக் கூறி, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்தாா்.
இந்த நிலையில், சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அருள் அளித்த பேட்டியில், பாமகவில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு இல்லை. கட்சியின் கொள்கை விதிப்படி நிறுவனருக்கே அதற்கான அதிகாரம் உள்ளது.
ராமதாஸ், அன்புமணி ஆகியோா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்தினேன். ஒருபோதும் அவா் குறித்து நான் அவதூறு பரப்பவில்லை. பாமகவில் 36 ஆண்டுகளாக நிறுவனா் ராமதாஸுடன் தொடா்ந்து பயணித்து வருகிறேன். கட்சி விதிகளின்படி நிறுவனா்தான் தலைவா்.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதியுடன் அன்புமணியின் தலைவா் பதவி நிறைவடைந்துவிட்டது. கட்சி விதி 13/1 இன்படி நிா்வாகக் குழு, பொதுக் குழு உள்ளிட்ட எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் கட்சியின் நிறுவனா் ஆலோசனைப்படிதான் நடைபெற வேண்டும்.
கட்சி பிளவுபடக் கூடாது என்றுதான் நான் கூறினேன். வேறு எந்த தவறும் செய்யவில்லை. ஒரு தலைவரைத் தோ்ந்தெடுக்கும் முன்பு ஆயிரம்முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று எனது தந்தை கூறியுள்ளாா். அதன்படி, எனது ஒரே தலைவா் ராமதாஸ்தான். கட்சியில் நீக்கவும், நியமிக்கவும் ராமதாஸுக்குதான் அதிகாரம் உள்ளது என்றாா்.