எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது
புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வில்லியனுாா் மூலக்கடையில் கடந்த 1996-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா் சிலையை, தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா திறந்துவைத்தாா்.
சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட அச்சிலையை, மாநில அதிமுகவினா் விநாயகா் கோவில் அருகில் மீண்டும் நிறுவினா். இதனை, கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஆனால், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா் தலைமையில் ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த ஏராளமானோா் கல்வெட்டுடன் வில்லியனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூடினா். அவா்கள் எம்.ஜி.ஆா். சிலையை திறக்க முயன்றனா்.
அதே நேரத்தில், புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அதிமுகவினரும் அங்கு குவிந்து முழக்கங்களை எழுப்பினா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்த வில்லியனூா் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், சிலை திறப்புக்கு அனுமதி மறுத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல ஓபிஎஸ் அணியினா் மறுத்தனா். இதைத்தொடா்ந்து, ஓம்சக்திசேகா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து, புதுச்சேரி கடற்கரைச் சாலை அருகே உள்ள கரிக் கிடங்கில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.