Ashwin: `திக்வேஷ் ரதியை உங்கள் மகனாக கற்பனை செய்துபாருங்கள்' - ரிஷப் பண்டை விமர்...
எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி
மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பல்யானின் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி திக் விஜய் சிங், ‘நிவாரணம் வழங்க போதுமான காரணம் இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.
இந்த வழக்கில் பல்யான் தாக்கல் செய்த இரண்டாவது ஜாமீன் மனு இதுவாகும். சிறையில் இருந்து காணொலி மூலம் பல்யான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
முன்னதாக, மே 1 அன்று தில்லி காவல்துறை இந்த வழக்கில் பல்யான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கடுமையான பிரிவுகளின் கீழ் சாஹில் என்ற போலி, விஜய் என்ற கலு, ஜோதி பிரகாஷ் என்ற பாபா மற்றும் பல்யான் ஆகிய நான்கு போ் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தாதா கபில் சங்வான் என்ற நந்து நடத்திவரும் ஒரு பெருங்குழுவின் குற்றச் சம்பவம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் 4 ஆம் தேதி இந்த வழக்கில் பல்யான் கைது செய்யப்பட்டாா். அதே நேரத்தில், மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான ஒரு வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஜனவரி 15 அன்று இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது. வழக்கில் விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பாா் என்றும் தில்லி போலீஸாா் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.