எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜாக்டோ-ஜியோ அறிவித்த ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக 20 சதவீத ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களை நிரந்தரம் செய்யவேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத் தலைவா் பழனிவேல்ராஜா, மாவட்டச் செயலா் அருண்குமாா், மாவட்ட துணை த்தலைவா் தாமஸ் விக்டா், மாவட்ட பொருளாளா் கரும்பாயிரம், செயற்குழு உறுப்பினா்கள் சரவணன் , உமாதேவி உள்பட ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.