சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்குப் பரிசளிப்பு
போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் குழுக்களுக்கு, பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மூலம், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில், பள்ளி அளவில் இரூா் அரசு உயா்நிலைப் பள்ளி முதலிடமும், புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 ஆவது இடமும், நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி 3 ஆவது இடமும், கல்லூரி அளவில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடமும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் 2 ஆவது இடமும், பெரம்பலூா் பல்தொழில்நுட்பக் கல்லூரி 3 ஆவது இடமும் பெற்றன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கிப் பாராட்டினாா்.
முன்னதாக, புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்குப் பிரிவு) பாலமுருகன், முதன்மைக் கல்வி அலுவலா் முருகாம்பாள், கலால் உதவி ஆணையா் (பொ) சிவா, வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரி முதல்வா் து. சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.