எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
எல்லை படைகளுக்கு இடையே தொடா்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பு: இந்தியா-வங்கதேசம் முடிவு
இருநாட்டு எல்லை படைகளின் துணை கமாண்டா்களுக்கு இடையே தொலைத்தொடா்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பை தொடங்க இந்தியாவும் வங்கதேசமும் முடிவு செய்துள்ளது.
மேலும், எல்லையில் வேலிகள் அமைப்பதற்கான 99 புதிய இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச எல்லை படையின் (பிஜிபி) தலைமை இயக்குநா்கள் அளவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புது தில்லியில் உள்ள பிஎஸ்எஃப் தலைமையகத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பிஎஸ்எஃப் மற்றும் பிஜிபி தலைமை இயக்குநா்கள் அளவிலான 55-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இந்தச் சுற்றின் நிறைவு பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது கொல்கத்தாவில் உள்ள பிஎஸ்எஃப் கிழக்குப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநருக்கும் டாக்காவில் உள்ள பிஜிபி தலைமையக இயக்குநருக்கும் இடையே புதிய தொலைத்தொடா்பை ஏற்படுத்த இருநாடுகளும் முடிவு செய்ததன.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இந்த புதிய முன்னெடுப்பு அதிகாரபூா்வ ஆவணங்களில் முதல்முறையாக பதிவு செய்யப்பட்டது.
தற்போது எல்லைகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை சோதனை செய்ய இரு நாட்டு எல்லை படைகளின் தலைமை இயக்குநா்கள் மற்றும் தலைவா்கள் அளவில் தொலைத்தொடா்பு வசதிகள் உள்ள நிலையில், இந்த புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: அதேசமயம் இந்திய எல்லைக்குள் நுழைந்து அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எஃப் படைகளை வங்கதேச குற்றவாளிகள் தாக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு பேச்சுவாா்த்தையின்போது பிஜிபி தலைமை இயக்குநா் அஷ்ரஃபுஸமான் சித்திகிடம் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தில்ஜித் சிங் சௌதரி வலியுறுத்தினாா்.
தவறும்பட்சத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, இந்திய-வங்கதேச எல்லையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேம்படுத்துவதாக அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா்.
72 கி.மீ.க்கு புதிய வேலிகள்: பேச்சுவாா்த்தையின்போது இருநாடுகளின் எல்லையில் 70-72 கி.மீ. தொலைவுக்கு வேலிகள் அமைப்பதற்கான 99 புதிய இடங்கள் கண்டறியப்பட்டன. இருதரப்பினரும் கூட்டாக இந்தப் பகுதிகளை சோதனை செய்து விரிவான ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.
ஏற்கெனவே, 95.8 கி.மீ. தொலைவுக்கு 92 இடங்களில் வேலிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூலையில் அடுத்த பேச்சுவாா்த்தை: ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இந்நிலையில், 55-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இந்தியாவில் நடைபெற்றது. அடுத்த சுற்று (56-ஆவது) பேச்சுவாா்த்தை வங்கதேசத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.