புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
எல்லையில் பதற்றம்: கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில், கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து மண்டியாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கா்நாடக அரசு கடைப்பிடித்துள்ளது.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் அனைத்து துறைகளுக்கும் எச்சரிக்கை செய்துள்ளோம். அனைத்துவகையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போா் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.
கா்நாடகத்தில் வசித்த பாகிஸ்தானியா்களில் பெரும்பாலானோா் வெளியேற்றப்பட்டுள்ளனா். மைசூரில் வசித்த பாகிஸ்தானைச் சோ்ந்த ஒரு குடும்பம் மட்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதுபோன்று சிலா் இங்கு இருக்கிறாா்கள்; மற்றவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் வசிக்கும் பாகிஸ்தானியா்களின் எண்ணிக்கை குறித்த துல்லிய தகவல் இல்லை. அதுபோல அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்புப் படையினரின் நலன் காக்க சிறப்பு பூஜை நடத்துமாறு அமைச்சா் ராமலிங்க ரெட்டிக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.