``ஏன் மும்மொழி வேண்டாம்?'' -பேரறிஞர் அண்ணாவின் உரையுடன் பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
பா.ஜ.க அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட திணிப்புகள் காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று தமிழக ஆளும் தி.மு.க அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய பா.ஜ.க அரசு கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதாகவும் தி.மு.க அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இத்தகைய சூழலில்தான், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ``மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்காது." என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ``கல்வியில் அரசியல் வேண்டாம். இது 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா என்று சொல்வதே, இன்னொரு மொழிப்போரை நீங்கள் தூண்டுவதாக அமைந்திருக்கிறது. எனவே, ஏதோ ஏதோ காரணம் சொல்லாமல், எங்களின் பணம் ரூ. 2,152 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்." என்று திருச்சியில் கூறினார்.

மேலும், எக்ஸ் தளத்தில் அன்பில் மகேஷ், ``வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 15, 2025
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத்… pic.twitter.com/gVzM9E9XEG
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. `இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்.'' என்ற பேரறிஞர் கூற்றைப் பதிவிட்டு, `ஏன் மும்மொழி வேண்டாம்?' என்று பேரறிஞர் அண்ணா கூறும் உரையை ஆடியோ க்ளிப்பாகப் பதிவிட்டிருக்கிறார்.