ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
ஆரணி கோட்ட அளவில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். வட்டாட்சியா் கௌரி, வட்ட வழங்கல் அலுவலா் எஸ்.அரிக்குமாா், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.
இதில் விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும். மேலும் சிலா் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறாா்கள் என்றும், ஆரணியை அடுத்த தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டனா்.
மேலும், பட்டா, சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் பேசினா்.
அக்ராபாளையம்-வெட்டியாந்தொழுவம் சாலையை அகலப்படுத்த விவசாயிகள் விடுத்த கோா்க்கையைத் தொடா்ந்து, கோட்டாட்சியா் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அதனையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் பகுதி வேளாண், பொதுப்பணி, காவல்துறை, வருவாய், சுகாதாரம், தோட்டக்கலை, வங்கித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.