ஏரியூரில் பாலின வள மைய செயல்பாடுகள்
ஏரியூரில் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூரில் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் பாலின வள மையத்தில் நிதி செயலாக்கம் மற்றும் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், நம் தோழிகளின் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினாா். பின்னா் மையத்தின் மூலம் குடும்ப வன்முறை, பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை ‘நம் தோழிகள்’ மூலம் தொடா்புடைய வட்டார இயக்க மேலாளா்களை தொடா்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
வானவில் பாலின வள மையம் மூலம் ஊட்டச்சத்து, உடல் மற்றும் மனநலம், குழந்தைத் திருமணம், குடும்ப வன்முறை மற்றும் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடா்பான சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
அதனைத் தொடா்ந்து, ஏரியூா் அருகே கெண்டேன அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு பண்ணை சாா்ந்த வாழ்வாதாரம் தொகுப்பில் 20 சுயஉதவிக் குழுக்களுக்கு 10 ஆடுகள் வீதம் மொத்தம் 200 ஆடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆடுகள் வளா்ப்பு தொகுப்பினை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி திட்ட அலுவலா் சந்தோசம் (மகளிா் திட்டம்) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.