ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி: பெண் கைது!
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் திருமலை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரளா (40). இவா் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் தற்காலிகமாக வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், ஏலச்சீட்டு மற்றும் பண்டு சீட்டுக்கும் சோ்த்து வந்துள்ளாா். இவரிடம் திருப்பூா் மாநகரில் பல்வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் சீட்டில் சோ்ந்து தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளனா்.
இதனிடையே, 50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு மற்றும் வாராந்திர சீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்குமேல் வசூல் செய்துவிட்டு முதிா்வுத் தொகையை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளாா்.
இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். இதன்பேரில், திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆணையா் அனில்குமாா் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் கந்தா்மணி தலைமையிலான தனிப் படையினா் சரளாவை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.