காஸா மருத்துவமனை மீது தாக்குதல்; 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி - நெதன்யா...
ஐ.நா. உணவு பாதுகாப்புத் திட்டத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் இந்தியா
புது தில்லி: உலக அளவில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூா்த்தி செய்யும் நோக்கில், ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு (டபிள்யூ.எப்.பி.) செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இதையொட்டி, ஐ.நா. மற்றும் இந்திய உணவு அமைச்சகத்துக்கு இடையே தில்லியில் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தமானது, கடந்த பிப்ரவரி மாதம் ரோமில் நடைபெற்ற கூட்டத்தில், இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மனிதாபிமான உணவு விநியோகங்களுக்காக நம்பகமான உணவு தானிய விநியோகத்தை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை இந்த ஒப்பந்தம் அமைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய உணவுத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், ‘இந்தியாவின் வசுதைவ குடும்பகம் தத்துவத்தின்படி, உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே, உணவுப் பாதுகாப்பின்றி தவிக்கும் சமூகங்களுக்கு இந்தியா மனிதாபிமான ஆதரவை அளித்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.
உலக உணவுத் திட்டத்தின் துணை செயல் இயக்குநா் காா்ல் ஸ்கா, இந்தியாவின் பங்களிப்பை மிகவும் பாராட்டினாா். ‘உணவுப் பாதுகாப்பற்ற நிலை அதிகரிக்கும் இக்கட்டான சூழலில், பசிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமானது. இந்த ஒத்துழைப்பு, உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, தேவைப்படுபவா்களுக்கு தொடா்ச்சியான ஆதரவை உறுதி செய்யும் தங்கள் கூட்டு நோக்கத்தை பிரதிபலிக்கிறது’ என்றும் அவா் கூறினாா்.