ஒசூரில் கடும் பனி மூட்டம்
ஒசூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிா் காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை கடும் பனி பொழிவு இருந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனா். இந்த பனி மூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன.
ஒசூா் நகரப் பகுதிகளிலும் கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவா்கள், வேலைக்கு சென்ற தொழிலாளா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிா், பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டனா்.