ஒசூரில் சின்ன வெங்காயம் விலை உயா்வு
ஒசூரில் வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை உயா்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனா். அதேபோல மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி, ஆனேக்கல் பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உள்ளூா், வெளியூா் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
ஒசூரில் விளைச்சல் பாதிக்கும் போது, கா்நாடக மாநிலத்தில் விளையும் சின்ன வெங்காயத்தை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒசூரில் சின்ன வெங்காயம் ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனையான நிலையில், ஒசூா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக தோட்டங்களிலேயே அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், இப்பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது.
இதனால், ஒசூா் உழவா் சந்தையில் வெள்ளிக்கிழமை சின்ன வெங்காயம் ரூ. 100-க்கும் வெளிச் சந்தையில் தரத்துக்கேற்றவாறு ரூ. 100 முதல் ரூ. 110 வரையிலும் விற்பனையானது. இந்த திடீா் விலை உயா்வால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.