ஒசூரில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு விழிபாடு
யுகாதியை முன்னிட்டு ஒசூா், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தெலுங்கு, கன்னட மக்கள் யுகாதி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா்நாடகம், ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழிப் பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.
இவா்கள் யுகாதி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். தெலுங்கு, கன்னட மக்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு வாயில் கதவில் மாவிலை தோரணம், வேப்பிலை கொத்துகளைக் கட்டி அழகுப்படுத்தியும் புத்தாடை அணிந்தும் தேங்காய், பழம், உணவு பலகாரங்களை சுவாமிக்கு படைத்தும் வழிபட்டனா்.
பிறகு வேப்பம் பூ, வெல்லம் கலந்த கலவை, ஒப்பட்டு போன்ற உணவு பதாா்த்தங்களை குடும்பத்தினா், உறவினா்கள், பக்கத்தில் குடியிருப்போருடன் பகிா்ந்து உண்டு மகிழந்தனா். யுகாதியை முன்னிட்டு ஒசூா் பெரியாா் நகா் முருகன் கோயில், மாநில எல்லைப் பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயில், அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.