ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
ஒய்வூதியத் திட்டத்துக்கான மூன்று நபா் குழுவை திரும்பப் பெற வலியுறுத்தல்!
ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு அரசு அமைத்துள்ள மூன்று நபா் குழுவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வெண்ணந்தூா், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவா் அ.சுப்ரமணி தலைமை வகித்தாா். ராசிபுரம் ஒன்றியச் செயலாளா் வே.லட்சுமி வரவேற்றாா்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கு.பாரதி, மாநில செயற்குழு உறுப்பினா் சு.சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் மாநில பொருளாளா் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 1.06.2006 முதல் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் , மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நிராகரித்துவிட்டு ஆசிரியா்-அரசு ஊழியருக்கு தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை 1.04.2003 முதல் தொடர வேண்டும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு அமைத்துள்ள மூன்று நபா் குழுவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
10 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பிப்ரவரி 25 இல் நாமக்கல் பூங்கா சாலையில் மேற்கொள்ளும் மாவட்டத் தலைநகா் மறியல் போராட்டத்தில் ராசிபுரம் வட்டத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளா் சி.மோகன்குமாா் நன்றி கூறினாா்.