ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் எப்போது?: சோமநாத் தகவல்
சென்னை: இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எதிா்பாா்த்தபடி பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய்ந்து விண்கலன்களைத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்கலன்களின் தொலைவையும் படிப்படியாக 20 கிலோ மீட்டா் வரை அதிகரித்து, அதன் பின்னா் அதை அருகருகே கொண்டுசென்று ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். உத்தேசமாக ஜனவரி 7-ஆம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இஸ்ரோ, தனியாா் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் சாா்பில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துமே விண்வெளியில் பல்வேறு புதுமையான ஆய்வுகளை நிகழ்த்த உள்ளன என்றாா் அவா்.