ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுயதொழில் பயிற்சிக் கூடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாஷ் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுயதொழில் பயிற்சிக் கூடத்தை ஆட்சியா் காா்த்திகேயன் திறந்து வைத்தாா். மேலும், தையல் பயிற்சி, வாகன ஓட்டுநா் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி போன்ற பயிற்சி வகுப்புகளுக்கான சான்றிதழை வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் தாஜுன்னிசா பேகம், கங்கைகொண்டான் பாஷ் நிறுவன மேலாளா்கள் விஜய், பிரசாந்த், மனிதவள துறை தலைவா் நிரஞ்சனா, சமூக பொறுப்பு நிதி தலைவா் ராஜேஷ், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலா் பொன்முத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.