காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
ஓக்லா, முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் ஏஐஎம்ஐஎம்
அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தில்லி பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட ஓக்லா மற்றும் முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா்கள் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டனா்.
ஏஐஎம்ஐஎம் கட்சி இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
2020 வடகிழக்கு தில்லி கலவரத்தில் குற்றஞ்சாட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிஃபா உா் ரஹ்மான் கான் மற்றும் தாஹிா் ஹுசைன் ஏஐஎம்ஐஎம் சாா்பில் முறையே முஸ்தபாஃபாத் மற்றும் ஓக்லா தொகுதிகளில் போட்டியிட்டனா்.
தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி இருவரும் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். நீதிமன்றம் இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து, தோ்தல் பிரசாரங்கள், வாகனப் பேரணிகளை மேற்கொண்டனா். அவா்களுக்காக கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளா் அமானத்துல்லா கான், பாஜக வேட்பாளா் மனீஷ் செளதரியைவிட 23,639 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் ஷிஃபா உா் ரஹ்மான் கான் 39,558 வாக்குள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அலி மெஹ்தி 11,763 வாக்குகளைப் பெற்ற நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
இதேபோன்று, முஸ்தபாஃபாத் தொகுதியில் பாஜக வேட்பாளா் மோகன் சிங் பிஷ்ட் ஆம் ஆத்மி வேட்பாளா் அதீல் அகமது கானை விட 17,578 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
மூன்றாவது இடத்தைப் பெற்ற ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் தாஹீா் ஹுசைனுக்கு 33,474 வாக்குகள் பதிவாகியிருந்தன.
காங்கிரஸ் வேட்பாளா் அரிபா கானுக்கு 12,739 வாக்குகள் பெற்றாா்.