ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!
ஓப்போ நிறுவனம் 7,000mAh திறன் கொண்ட ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்திய நிலையில், இன்று (ஏப். 22) விவோ நிறுவனம் 7300mAh திறனுடைய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ நிறுவனமும் விவோ நிறுவனமும் கேமரா மீது பிரியம் கொண்ட பயனர்களைக் குறிவைத்து தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் தற்போது அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை போட்டிபோட்டுக்கொண்டு அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றன.
ஓப்போ கே 13 5ஜி என்ற ஸ்மார்ட்போனை நேற்று ஓப்போ அறிமுகம் செய்தது. இதன் பேட்டரி திறன் 7,000mAh. இதனைத் தொடர்ந்து சீனாவின் விவோ நிறுவனம் இன்று 7300mAh திறன் கொண்ட விவோ டி4 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ டி4 5ஜி சிறப்பம்சங்கள்
திரையின் சிறப்புகள்
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனானது, 6.77 அங்குல திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. 1,200 nits வெளிச்சத்தை உமிழும் வகையில் பிரகாசமுடையது. திரை முழுவதும் எச்டி அம்சமுடையது.
கேமராவின் சிறப்புகள்
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனில் 50 MP கேமராவுடன் ஐஎம்எக்ஸ்882 என்ற சோனி நிறுவனத்தின் சென்சார் உள்ளது. இதனால், புகைப்படங்களின் துல்லியத்தன்மை மேம்பட்டதாக இருக்கும். இத்துடன் 2MP கூடுதல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரியின் சிறப்புகள்
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனைக்கான தனித்துவமாக பேட்டரியின் திறன் உள்ளது. இது 7,300 mAh திறன் கொண்டது. அதைவிட கூடுதல் சிறப்பம்சமாக, 90W வேகமாக சார்ஜ் ஏறும் திறனுடையது. கார்பன் நானோடியூப், எலக்ட்ரோட் மறுஉருவாக்கம், நானோ கேஜ் வடிவம் போன்றவை பேட்டரியின் திறன் குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஒருமுறை முழுமையாக ரீசாஜ் செய்தால் 8 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து விடியோ பதிவு செய்யலாம் என விவோ கூறுகிறது.
விவோ டி4 5ஜி விலை?
விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்நாப்டிராகன் 7எஸ் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தது. பயன்படுத்தும்போது வெப்பமாவதைத் தடுக்கும் வகையில் 7,800mm² திறனுடைய கிராஃபைட் தாள் உள்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.
8GB + 128GB நினைவகம் கொண்ட (வேரியண்ட்) ஸ்மார்ட்போன் ரூ. 21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ. 4000-க்கு விவோ நிறுவனம் ஆரம்பகால சலுகை அளிக்கிறது. எனில், ரூ. 17,999-க்கு இதனை வாங்கலாம்.
இதேபோன்று 12GB + 256GB வேரியண்ட் ஸ்மார்ட்போனானது ரூ. 25,999-க்கு விற்பனையாகிறது. இதற்கு ரூ. 3000 ஆரம்பகால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தவணை முறையில் மாதம் ரூ. 4333 செலுத்தியும் ஸ்மார்ட்போனை பெறலாம்.
இதையும் படிக்க | அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!