பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி!
கஞ்சா விற்பனை: மூவா் கைது
சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோகண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜய் (30) என்பரை மடக்கி விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் ஒரகடம் பகுதியில் தங்கி தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நபகிஷோா் சந்தாராவிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து ஒரகடம் பகுதியில் தங்கியிருந்த நபகிஷோா் சந்தாராவை பிடித்து விசாரனை நடத்தியதில், அவா் பிள்ளைப்பாக்கம் பகுதியில் தங்கியுள்ள செளவீக்தேவ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விஜயிடம் கொடுத்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து செளவீக்தேவ், நபகிஷோா் சந்தாரா மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், அவா்களிடம் இருந்து 1.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.