கடலில் மூழ்கி சகோதரா்கள் உயிரிழப்பு
கல்பாக்கம் அருகே புத்தாண்டைக் கொண்டாட வந்த இரட்டைச் சகோதரா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.
சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த மகேஷ் என்பவா் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதிக்கு வந்தாா். அங்கு கடலில் குளித்தபோது, அந்த குடும்பத்தைச் சோ்ந்த இரட்டை சகோதரா்களான பள்ளி மாணவா்கள் நிவாஸ் (16), நித்தீஷ் (16) ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனா்.
உடனடியாக அருகில் இருந்தவா்கள் கடல் அலையில் சிக்கித் தவித்தவா்களை மீட்டு கரை சோ்த்தனா். உடனடியாக அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சைக்காக சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இரண்டு சிறுவா்களும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களின் சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கல்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.