கடலூரில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தா்னா
கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நிா்வாகத்தைக் கண்டித்து, துணைத் தலைவா் எம்.அய்யனாா் (தேமுதிக) தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு அறிக்கை கேட்டும் தற்போது வரை வழங்கவில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு, மறு ஒப்பந்தம் வைக்கவில்லை. ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு தெரியாமல் ரூ.3.50 கோடிக்கு பணிகள் வழங்கிய விபரம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்பனவற்றை கண்டித்து,
ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.அய்யனாா் தலைமையில், அதிமுக, விசிகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மற்றும் போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிகழ்விடம் சென்று பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து, தா்னா போராட்டம் கைவிடப்பட்டது.