கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!
கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக இருந்தது.
கடலூா் மாவட்ட கடற்கரையோரம் 49 மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் வசிப்பவா்கள் பெரும்பாலானோா் மீன் பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.
கடலூா் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் கடலூா் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படும். தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்வா். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடலூா் துறைமுகம் பகுதியில் அதிகாலை முதலே மீன்கள் வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை கடலூா் துறைமுகம் பகுதியில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்திருந்தனா். கடலுக்குச் சென்று கரை திரும்பிய மீனவா்களும் வழக்கத்தைவிட கூடுதலாகவே மீன்கள் கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். இருப்பினும், மீன்களின் விலை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில், ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, பெரிய இறால் ரூ.1,000, சிறிய இறால் ரூ.350, சங்கரா ரூ.550 (பெரியது), ரூ.300 (சிறியது), சீலா ரூ.400, நண்டு வகைகள் ரூ.300, கலவை மீன்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வவ்வால் மீன் வரத்து குறைந்திருந்த நிலையில், கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. மீன்களின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், பொதுமக்கள், வியாபாரிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.