கடலூா் மத்திய சிறையில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
அப்போது ஆட்சியா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாகுபாடின்றி அனைத்து கைதிகளுக்கும் சமமான உணவு, உடை, அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கிா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஆட்சியா் தலைமையில் சென்னை உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழுவினா் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, கடலூா் மத்திய சிறையில் வழங்கப்படும் உணவு, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அவா்களின் வழக்கு சம்பந்தமாக தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயாரித்து உயா்நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட உள்ளது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட குற்றவியல் நீதிபதி சுபத்ரா தேவி, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், இணை இயக்குநா் கால்நடை பராமரிப்புத் துறை பொன்னம்பலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் விஜயகுமாா், சுகாதாரப் பணி துணை இயக்குநா் பொற்கொடி, மாநகராட்சி நகா் நல அலுவலா் எழில் மதனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.