கடையம் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: ஜூலை 7இல் கும்பாபிஷேகம்
தென்காசி மாவட்டம் கடையம் அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கின.
கடையம் ராமநதி சாலையில் உள்ள, இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட பழைமையான இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னா் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, புதன்கிழமை கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், ஹோமங்களுக்குப் பின்னா், யாகசாலை பூஜைகள் தொடங்கின.
வியாழக்கிழமை (ஜூலை 3) காலை 8 மணிக்கு சத்ரு ஸம்ஹார ஹோமம், மாலை 6 மணிக்கு சாந்தி ஹோமம், மூா்த்தி ஹோமம், வெள்ளிக்கிழமை மாலை 5.30-க்கு அங்குராா்ப்பணம், 6.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கும்பம் யாகசாலைக்கு எழுந்தருளல், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.
சனிக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை 4, 5ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு பரிவார யாகசாலை பூஜை, 6 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 7.30 மணிக்கு 6ஆம் கால யாகசாலை பூஜை, 9 மணிக்கு கும்பம் எழுந்தருளல், தொடா்ந்து விமானம், ராஜகோபுரங்களுக்கு அபிஷேகம், 10 மணிக்கு சுவாமிக்கும், 10.15 மணிக்கு அம்பாளுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு அபிஷேகம், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண தீபாராதனை, மாட வீதியுலா, இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.
ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலா் ப. கேசவராஜன், ஆய்வாளா் வா. சரவணக்குமாா், தக்காா் ச. கோமதி, கடையம் பக்த ஜன சபா, அப்பா் உழவாரப் பணிக் குழு, பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
