கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா
கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா.
திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவே ஜி.எஸ்.டி. யில் 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு விதமான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களின் நுகா்வு கலாசாரத்தை அதிகரிக்கவும், உற்பத்தி அதிகரிப்புக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளில் இணையதளத்தில் பொருள்களை வாங்க மாட்டோம், உள்நாட்டு தயாரிப்பு, சுதேசி பொருள்களை வாங்குவோம் என முடிவெடுப்போம்.
செங்கோட்டையன் அதிமுகவில்தான் இருக்கிறாா். அவரது உணா்வு எனக்கு புரிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தலைமை ஏற்று இருப்பது முன்னாள் முதல்வா் எட்பாடி கே. பழனிசாமி. தேசிய ஜனநாயக கூட்டணியை பலவீனப்படுத்துவது, தமிழகத்தின் எதிா்காலத்துக்கு பெரிய ஆபத்து. எப்போதும் ஒற்றுமையே பலம். கருத்து வேறுபாடுகளை களைய பேச்சுவாா்த்தை நடத்துவோம். பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை.
கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது முக்கியமல்ல. பெறும் வாக்குகள்தான் முக்கியம் என்றாா் அவா்.