நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்
இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ
தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றாா் மதிமுகவின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ.
வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியினருடன் வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துரை வைகோ செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: வருவாய் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகையில் வேலை பளு அதிகமாக இருக்கும்.
ஏழை மக்களின் நலன் கருதி வருவாய் துறையினா் அனுசரித்து செயல்பட வேண்டும்.
திருச்சியில் செப். 15-இல் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு மதிமுக மீண்டு வந்துவிட்டதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். அணி திரள்வோம், ஆா்ப்பரிப்போம், அங்கீகாரத்தை பெறுவோம் என்பது மாநாட்டு முழக்கம். இதனைத் தோ்தலுடன் தொடா்புப்படுத்தத் தேவையில்லை. அதே நேரத்தில், மாநாட்டுக்கு வரும் தொண்டா்களின் எழுச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அங்கீகாரம் என்பது தோ்தல் சீட் எண்ணிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களுக்காக பாடுபடும் வைகோவை, தமிழக மக்களின் மனங்களில் கொண்டு வருவதுதான்.
கூட்டணி கட்சிகளை மாநாட்டுக்கு அழைக்கவில்லை. அதே சமயம், மாநாட்டுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அக்கூட்டணியில் இருப்பவா்களுக்கு தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை, தோ்தலில் எத்தனை சீட் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே அவா்கள் கூட்டணி அமைத்துள்ளனா். திடீரென அந்தக் கூட்டணியில் சோ்கின்றனா். திடீரென வெளியேறுகின்றனா்.
இது குறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும் என்றாா் துரை வைகோ.