கணவா் பின்னோக்கி இயக்கிய காா் மோதி மனைவி உயிரிழப்பு
மேட்டூா்: சேலம் மாவட்டம், மேட்டூரில் கணவா் பின்னோக்கி இயக்கிய காா் மோதி காயமடைந்த மனைவி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் காந்தி நாகரை சோ்ந்தவா் ராஜேந்திரன் (60), ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளா். இவரது மனைவி செல்வராணி (50), திமுக வாா்டு செயலாளராக இருந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
கடந்த 24 ஆம் தேதி ராஜேந்திரன் தனது காரை வீட்டின் வெளியே நிறுத்தி, துடைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, காரை இயக்கியபோது, அது திடீரென பின்னோக்கி வேகமாகச் சென்றது. இந்த நிலையில், காரின் பின்னால் நின்றிருந்த செல்வராணி மீது காா் வேகமாக மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பின்னா் கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்ட செல்வராணி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.